ஆட்டு ஈரல் ரோஸ்ட்

ஆட்டு ஈரல் ரோஸ்ட் (Goat Livre Roast)

ஆட்டு ஈரல் ரோஸ்ட் நல்ல காரமான குழம்பு. ஆட்டு ஈரலில் வைட்டமின் A, ஃபோலிக் ஆசிட், புரத சத்து, இரும்பு சத்து அதிகம் உள்ளது. இது மூளை செயல் திறன் அதிகரிக்கவும், சதை போடவும் துணை புரியும். நான் சிறுவயதில் ஒல்லியாக இருந்ததால் என் அம்மா எனக்கு ஆட்டு ஈரலை ஸ்பெஷலாக சமைத்து தருவார்கள். இப்போது என்னுடைய குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்யும் ஈரல் கிரேவி ரொம்ப பிடித்துள்ளது. நீங்களும் எளிமையாக செய்யலாம்.

Recipe in English is here.

தேவையான பொருட்கள்

மசாலா அரைக்க

துருவிய தேங்காய் – 1/2 கப்
வத்தல் (காய்ந்த சிவப்பு மிளகாய்) – 6
பூண்டு – 3 பல்
கொத்தமல்லி விதை – 1 டீ ஸ்பூன்
மிளகு – 1/4 டீ ஸ்பூன்
பெருஞ்சிரகம் – 1/4 டீ ஸ்பூன்
கருவேப்பிலை – 1 இணுக்கு

கிரேவி

ஆட்டு ஈரல் – 1/4 கிலோ
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 1/2 கப் நறுக்கியது
தக்காளி – 1
வத்தல் (காய்ந்த சிவப்பு மிளகாய்) – 3
பூண்டு – 4 பல்
பெருஞ்சிரகம் – 1/2 டீ ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை – 1 இணுக்கு
கொத்தமல்லி இலை நறுக்கியது – 2 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

ஆட்டு ஈரல் ரோஸ்ட் செய்முறை

முன் தயாரிப்பு

ஈரலை தண்ணீரில் 3 முறை நன்றாக அலசவும்.
பெரிய துண்டுகளாக ஈரலை நறுக்கி கொள்ளவும்.

மசால் அரைக்கும் முறை

ஒரு கடாயை மிதமான சூட்டில் வைத்து, அதில் துருவிய தேங்காயை முதலில் சேர்க்கவும்.
எண்ணெய் எதுவும் சேர்க்காமல் வறுக்க ஆரம்பிக்கவும்.
இப்போது மிளகாய் வத்தல், கொத்தமல்லி விதை மற்றும் மிளகு சேர்த்துக்கொள்ளவும்.
பூண்டை தோலுடன் தட்டி, கடாயில் சேர்க்கவும்.
கடைசியாக கருவேப்பிலை சேர்த்து நிறம் மாறும்வரை வறுக்கவும்.
அடுப்பை அணைத்து, சூடு குறைந்த உடன், இதை மிக்சி ஜாருக்கு மாற்றவும்.
நன்றாக நெருநெருப்பாக அரைத்துக்கொள்ளவும்.

கிரேவி செய்முறை

பூண்டை தோலுடன் தட்டி வைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயை மிதமான சூட்டில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெயை முதலில் சேர்க்கவும்.
கடாயில் பெருஞ்சீரகம் சேர்க்கவும்.
பெருஞ்சீரகம் பொறியும்போது, தட்டி வைத்த பூண்டு, கருவேப்பிலை மற்றும் வத்தலை ஒன்றாக சேர்க்கவும்.
ஒரு நிமிடம் வரை வறுத்து, வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்க்கவும்.
வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன், இஞ்சி பூண்டு விழுது, வெட்டி வைத்த தக்காளி சேர்க்கவும்.
தக்காளி கரையும் வரை நன்றாக வதக்கவும்.
இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி (தனியா) தூள் சேர்த்து கலக்கவும்.
1/2 கப் தண்ணீர், 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை சேர்த்து, நன்றாக கலக்கவும்.
தீயை முழு அளவில் வைத்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்த உடன், சுத்தம் செய்து வைத்திருக்கும் ஈரலை சேர்த்து மசாலா நன்றாக சேரும்படி கலக்கவும்.
கடாயை மூடிவைத்து 5 நிமிடம் வேகவைக்கவும்.
இப்போது அரைத்து வைத்திருக்கும் மசாலை சேர்த்து கலக்கவும்.
கடைசியாக 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை, 1 இணுக்கு கருவேப்பிலை சேர்த்து, நன்றாக கலக்கவும்.
அடுப்பை அணைத்து விடவும்.
ஆட்டு ஈரல் ரோஸ்ட் தயார்.
இந்த மட்டன் லிவர் கிரேவியை, சாதம், ரசத்துடன் சேர்த்து பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்

ஆட்டு ஈரலை 7 நிமிடத்திற்கு மேல் வேக வைக்க வேண்டாம். இல்லையென்றால் அது கடினமானதாக மாறிவிடும்.
மிக்சியில் மசாலா நெருநெருப்பாகவே அரைக்கவும். பவுடர் பதம் வேண்டாம்.
அரைத்த மசாலா சேர்த்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.
நான்-ஸ்டிக் கடாய் இல்லை என்றால் மசாலா வறுக்கும்போது சிறிது எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.

படவிளக்கம்

மசால் அரைக்கும் முறை

கிரேவி செய்முறை


Discover more from Nish's Recipes

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ஆட்டு ஈரல் ரோஸ்ட்”

Let me know the outcome of the recipe!