Homemade Masala – குழம்பு மசால்
குழம்பு மசால் வீட்டில் தயாரிப்பது மிக எளிது. இந்த மசாலா நிறைய குழம்பு வகைகள் செய்வதற்கு மிக உதவியாக இருக்கும். இது என் பாட்டியின் செய்முறை. என் பாட்டிதான் வழக்கமாக எனக்கு மசாலா அரைத்து கொடுப்பார்கள். அதன்பின் என் அம்மா எனக்கு கொடுக்கிறார்கள். இந்தமுறை நானே தயார் செய்ய நினைத்து முயற்சி செய்தேன். சிறிய அளவில் முதன் முறையே நன்றாக வந்தது. என் அம்மா அதற்காக சில டிப்ஸ் கொடுத்தார்கள். அதை அப்படியே செய்ததில், நல்ல மணமும் சுவையும் கொண்ட மசால் கிடைத்தது.
1/2 கிலோ மசாலா கிடைக்கும்.
Find recipe in English here.
தேவையான பொருட்கள்
வரமிளகாய் – 200 கிராம்
சீரகம் – 50 கிராம்
மிளகு – 50 கிராம்
கொத்தமல்லி விதை – 200 கிராம்
வெந்தயம் – 50 கிராம்
பெருங்காயம் – சிறிய துண்டு
துவரம் பருப்பு – 2 டீ ஸ்பூன்
மஞ்சள் – 1 துண்டு
குழம்பு மசால் செய்முறை
வரமிளகாய் காம்பை கிள்ளி நல்ல வெயிலில் ஒரு நாள் முழுவதும் காய வைக்கவும்.
மஞ்சள், வரமிளகாய் தவிர்த்து அனைத்து பொருட்களையும் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
தீயை குறைவாக வைத்து, நிறம் மாறும் வரை வறுக்கவும் (படம் பார்க்க).
வறுத்த அனைத்து பொருட்களையும் நன்றாக ஆறவிடவும்.
மஞ்சள் மற்றும் பெருங்காயத்தை நொறுக்கி, மிக்சி ஜாரில் சேர்க்கவும்.
வறுத்த பொருட்களையும் மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைத்த கலவையை ஒரு சல்லடையில் தட்டி சலிக்கவும்.
இப்போது காயவைத்த வரமிளகாயையும் மிக்சி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.
அதையும் சல்லடையில் தட்டி சலிக்கவும்.
சலிக்கும்போது மிஞ்சும் துகள்களை மறுபடி மிக்சி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.
படத்தில் உள்ளபடி, மீதமுள்ள துகள்களை கீழே போட்டுவிடலாம்.
சலித்த மசாலை, ஒருநாள் இரவு (8 மணி நேரம் வரை) வெளியில் பரத்தி விட்டு உலர்த்தவும்.
பின்னர் மசாலை காற்று புகாத பாத்திரத்தில் பாதுகாத்து கொள்ளவும்.
இந்த மசாலை வெயிலில் காயவைத்தால், அதிக நாள் உபயோகிக்கலாம்.
கூடுதல் குறிப்புகள்
நான் உபயோகித்த வரமிளகாய் மிகவும் காரமானது. நீங்கள் காரம் குறைந்த வரமிளகாய் உபயோகித்தால் 250 கிராம் வரை சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த மசாலா எல்லா வகையான சைவ, அசைவ குழம்புக்கும் உபயோகிக்கலாம்.
இது சாம்பார் வைக்கவும் உபயோகிக்கலாம்.
பெரிய அளவில் செய்வதென்றால், மாவு அரைக்கும் இடத்தில் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். அதற்குரிய அளவுமுறை இங்கே.
One Reply to “குழம்பு மசால்”