மட்டன் தம் பிரியாணி

Mutton Dum Briyani – மட்டன் தம் பிரியாணி

மட்டன் தம் பிரியாணி ஒரு வகையான பிரியாணி, இது சீரகசம்பா அரசி மற்றும் சில மசாலா பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும். என் சித்தி இந்த முறையில் பிரியாணி செய்வார்கள், நான் அதற்கு விசிறி. அவர்களிடம் செய்முறை விளக்கம் மற்றும் சில குறிப்புகள் கேட்டு செய்து பார்த்தேன், மிக அருமையான ருசியில் பிரியாணி வந்தது. தண்ணீர் அளவு கணக்கிடுவது தான் பிரியாணி பதத்தை நிர்ணயிக்கும், இதில் தம் போடுவதால் பதம் தப்ப வாய்ப்பே இல்லை. புதிதாக சமைப்பவர்கள் கூட இந்த முறையில் எளிதாக சமைக்கலாம்.

Find recipe in English here.

தேவையான பொருட்கள்

மசால்பொடி

பட்டை – 2 சிறிய துண்டு
கிராம்பு – 5
ஏலக்காய் – 7
கல்பாசி – 1/2 டேபிள் ஸ்பூன்
பெருஞ்சீரகம் / சோம்பு – 3 டீ ஸ்பூன்
கசகசா – 1 டீ ஸ்பூன்
முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்
அன்னாசிப்பூ – பாதியளவு

மசாலா

பூண்டு – 5 பல்
இஞ்சி – 1 விரல் அளவு
கொத்தமல்லி இலை – 1/2 கப்
புதினா – 1/2 கப்
பச்சை மிளகாய் – 4 – 6

இதர பொருட்கள்

ஆட்டு கறி – 1/4 கிலோ
சீரக சம்பா அரிசி – 1.5 கப்
பிரியாணி இலை – 2
வெங்காயம் – 1 (நீள் வாக்கில் வெட்டியது)
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/4 டீ ஸ்பூன்
தயிர் – 1.5 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

மட்டன் தம் பிரியாணி செய்முறை

முன் தயாரிப்பு

மசாலா பொடி அரைக்க தேவையான அனைத்தையும் மிக்சி ஜாரில் எடுத்து நன்றாக அரைக்கவும்.
பின் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும்.
அதே ஜாரில், இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
அதையும் ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக்கொள்ளவும்.
ஆட்டு கறியை அலசி, தேவையான அளவில் வெட்டிக்கொள்ளவும்.

கறி வேகவைத்தல்

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி மிதமாக சூடுபடுத்தவும்.
பிரியாணி இலை, வெங்காயம் மற்றும் முந்திரியை சேர்க்கவும்.
ஒரு நிமிடம் வதக்கிய பின், கறித்துண்டுகளை சேர்க்கவும்.
நிறம் மாறும் வரை வதக்கவும்.
இப்போது மஞ்சள் தூள், மசால் பொடி மற்றும் உப்பு சேர்க்கவும்.
நன்றாக கலந்து பின் அரைத்து வைத்திருக்கும் மசாலா மற்றும் தயிர் சேர்க்கவும்.
குக்கரை மூடி குறைவான தீயில் 5 நிமிடம் வேகவைக்கவும்.
கடைசியாக 2 கப் தண்ணீர் சேர்த்து, மூடி 15-20 நிமிடம் விசில் வைத்து வேகவைக்கவும்.

பிரியாணி செய்முறை

பாத்திரத்தில் மொத்தம் 3 கப் அளவு தண்ணீர் இருக்கும் அளவுக்கு சேர்க்கவும்.
சீராக சம்பா அரிசியை தண்ணீரில் அலசி சேர்க்கவும்.
உப்பு சரிபார்த்து, ஒரு தட்டு வைத்து மூடவும்.
முழு தீயில் வைத்து அரிசி முக்கால் பங்கு வேகும் வரை சமைக்கவும்.
இடையிடையே, அடி பிடிக்காமல் கிளறி விடவும்.
இப்போது தீயை மிதமான அளவிற்கு மாற்றவும்.
இனிமேல் மூடியிருக்கும் தட்டை தம் முடியும் வரை திறக்கக்கூடாது.
இப்போது 8 நிமிடம் சமைக்கவும்.
அடுப்பை அணைத்துவிட்டு, தீ கங்குகளை (கங்கல்) தட்டில் போட்டு 15 நிமிடம் தம் போடவும்.
மூடியை கவனமாக திறந்து, ஓரத்திலிருந்து அடி ஓட்ட பிரியாணியை கிளறவும்.
சுவையான தம் பிரியாணி தயார்.
இதை வெங்காய பச்சடி, குழம்பு சேர்த்து பரிமாறலாம்.

கூடுதல் குறிப்புகள்

நான் வீட்டிலேயே நெருப்பு / கங்கல் தயார் செய்தேன். மிக கவனமாக செய்யவும்.
பாதுகாப்பான இடம் இருந்தால் மட்டுமே இதை செய்யவும். இல்லையென்றால் சூடான தோசைக்கல் அல்லது சூடான இரும்பு தவா கொண்டு மூடி தம் போடவும்.

படவிளக்கம்

தேவையான பொருட்கள்

முன் தயாரிப்பு

கறி வேகவைத்தல்

பிரியாணி செய்முறை

One Reply to “மட்டன் தம் பிரியாணி”

Let me know the outcome of the recipe!